×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை பார்த்தசாரதி, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் பரவசம்

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில், தி.நகர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷம் எழுப்பி பரவசமடைந்தனர். ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் சார்பில் அனைத்து பெருமாள் கோயில்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. சென்னையில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் இருந்தது, தற்பொழுது அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைப்போன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் நடைபெற்றது.

சொர்க்கவாசல் விழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்களுக்கு சிறப்பு பாதைகள் குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி போன்றவை கோயிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதேபோன்று, தி.நகர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிந்தா, கோவிந்தா கோஷங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலில் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்ற 4 திருக்கோலங்களில் ரங்கநாதப் பெருமாள், சாந்த நரசிம்மர், நீர்வண்ணப் பெருமாள், விக்ரமர் ஆகிய 4 நிலைகளில் காட்சி தருகிறார் என்பது கூடுதல் சிறப்பு ஆகும். இது, திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற திருத்தலமாகும். இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள 108 வைணவ தலங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது.

Tags : Vaikuntha Ekadasi ,Parthasarathi ,Prasanna Venkatesa Perumal Temples ,Chennai , Ahead of Vaikuntha Ekadasi, opening of gates of Heaven at Parthasarathy, Prasanna Venkatesa Perumal Temples in Chennai: Devotees ecstatic
× RELATED திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...